மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய வழக்கில், சிறுவனை பரிசோதிக்க தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிக்கப்பட்ட தன் மகனை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிபதி பாஸ்கரன் அடங்கிய அமர்வு, சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மூவர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த குழுவில் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர் ரெஜினால்ட், ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆலோசனை செய்து, பாதிக்கப்பட்ட சிறுவனை பரிச்சோதனை செய்ய தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்து அதற்கான அறிக்கையை வரும் செப்டம்பர் 10 ம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.