இளங்கலை ரேடியோதெரபி படித்தவர்களையும் பரிசீலனை செய்ய உத்தரவு

இளங்கலை ரேடியோதெரபி படித்தவர்களின் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்ய ஆணை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரேடியோதெரபி டெக்னீஷியன்கள் பணிக்கான தேர்வில் இளங்கலை ரேடியோதெரபி படித்தவர்களின் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 25 ரேடியோதெரபி டெக்னீஷியன்கள் பணிக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது.

இதுசம்பந்தமான அறிவிப்பில், டிப்ளமோ ரேடியோதெரபி படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை மருத்துவக் கல்லூரியில் மூன்றாண்டு இளங்கலை ரேடியோதெரபி படித்த ஹேமலதா உள்பட பத்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்த போது, மூன்றாண்டுகள் படித்த தாங்களே இப்பதவிக்கு தகுதியானவர்கள் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இவர்கள் அதிக கல்வித்தகுதி பெற்றுள்ளதால், இவர்களை இப்பதவிக்கு தேர்வு செய்ய முடியாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக இணைப்பு பெற்ற சென்னை மருத்துவ கல்லூரியில் படித்த இவர்களே இப்பதவிக்கு தகுதியானவர்கள். இந்த படிப்புக்கு மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனால் ரேடியோதெரபி டெக்னீஷ்யன்கள் பணியிடங்களுக்கு இவர்களின் விண்ணப்பத்தையும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைக்கும், மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட்டார்.

×Close
×Close