வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி, சோழிங்கநல்லூர் வட்டங்களில் உள்ள வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, கல்லுக்குட்டை, ஐஐடி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து பலர் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக நாளிதழில் (தினமலர்) வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களில் உள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், நீர் நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்களை மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் மீட்பது தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.