அமெரிக்காவில் இரு முறைக்கு மேல் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளதைப் போல இந்தியாவில் அரசியல் பதவிகளை வகிப்பவர் இவ்வாறு ஏன் கட்டுப்பாடுகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக, பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், 'எங்கள் ஊர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கிராம வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் நான்கு பேருக்கு நான் வாக்களிக்க வேண்டியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வது போல, அவர்களின் உடல் நிலை பற்றிய அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்தால் அவர்களில் சிறந்தவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய முடியும். மேலும் தேவையற்ற இடைத் தேர்தல்களை தவிர்க்க முடியும். மக்களின் வரிப்பணம் விரயம் ஆவதை தடுக்க முடியும் . இது தொடர்பாக கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் தேர்தல் ஆணையம் கூறவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கை அல்லது அவர்களின் நோய் குறித்த தகவலை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எம்.பி - எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிப்பது தொடர்பாக முடிவெடுக்க, மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது சம்பந்தமாக மத்திய சட்ட ஆணையத்தின் கருத்துக்களைப் பெற்று தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால் அவகாசம் கோரினார்.
விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் அமெரிக்காவில் உள்ளது போல இரு முறைக்கு மேல் அதிபர் உள்ளிட்ட பதவிகளை வகிக்க கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன. அதே போல ஒரு கட்டுப்பாட்டு அல்லது விதிகளை இந்தியாவில் இல்லை. ஏன் அமெரிக்கா போன்ற விதிகளை, இந்தியாவில் அரசியல் பதவிகளில் வருபவர்களுக்கு என் நிர்ணயக்க கூடாது என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொண்டு, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில சட்ட ஆணையங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார்.