அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது! - ஐகோர்ட்

அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது

அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான நடைமுறை குறித்த விதிகளை வகுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசுத்தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை எனக் கூறி, இந்த விதிகளை ரத்து செய்யக் கோரியும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரியும் வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல் அரசு தலைமை வழக்கறிஞரே தேர்வு செய்து நியமிக்கிறார் என மனுதாரர் வசந்தகுமார் குற்றம் சாட்டினார்.
ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் தேர்வு செய்து தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பப்படுவதாகவும், அந்த பட்டியலை, தலைமை வழக்கறிஞர் மற்றும் பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து நியமிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன… ஆனால், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை… அதனால், விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close