முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 15 நாட்கள் மட்டும் அனுமதி அளித்தால் போதும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்கள் நினைத்தாலும் நீண்ட நாட்கள் அங்கிருக்க முடியாது; டிரம்ப் உங்களை வெளியேற்றிவிடுவார்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர். இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரினார்.
ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்கப்பட்டால், பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பயணத்திட்டம் குறித்த விவரங்களை அசோக்குமார் தரப்பு தாக்கல் செய்யவும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.