தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எத்தனை என்பது குறித்து ஜூலை 23-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை (14.07.2025) உத்தரவிட்டுள்ளது.
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்தக் கோரி, நீலாங்கரை காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல்துறையினர் இதுவரை செயல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், இதுபோல பல வழக்குகளில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகக் கவலை தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்டுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார். அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்கக் கோர வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேபோல, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.