Advertisment

புலம்பெயர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஐகோர்ட் நோட்டீஸ்

கொரோனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, மத்திய – மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court notice,state government, central government, migrant workers, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுTamil News Today Live

Tamil News Today Live

கொரோனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, மத்திய – மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா ஊரடங்கு காரணமாக, மஹாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்க்கும் எவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஊரடங்கு அறிவித்த நாள் முதல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

வேலை வாய்ப்பை இழந்து, உணவு, உறைவிடம் இல்லாததால் குழந்தைகளுடன் நடைபயணமாக சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளதாகவும், வழியில் பட்டினியிலும், விபத்துக்களிலும் உயிரிழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்களை அரசு அதிகாரிகள் புறக்கணித்து விட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்?

மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கியுள்ளன?

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநில எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படுகிறார்களா?

எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றனவா?

சொந்த ஊர் திரும்பும் வழியில் எத்தனை தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்? அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன?

நாடு முழுவதும் எத்தனை தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்?

மீதமுள்ள தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதும் கொரோனா பரவலுக்கு ஒரு காரணமா?

வெளி மாநில தொழிலாளர்களுக்கு நிதியுதவியும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனா?

எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக மே 22-ம் தேதி விரிவான பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment