2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்களைக் கொன்ற வழக்கில் மொத்தம் 21 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) மறு விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிய NHRC, துப்பாக்கிச் சூடு நடந்த ஐந்து மாதங்களுக்குள் எந்த காரணத்தையும் பதிவு செய்யாமல் விசாரணையை முடித்தது. மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை மாநில அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆணையம் பரிந்துரைத்த 20 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆணையத்தால் பெயரிடப்பட்ட 17 காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, என்று ஹென்றி திபேன் மனுவில் தெரிவித்திருந்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேசன், மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தென் மண்டல ஐ.ஜி ஷைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சி சரத்கர், எஸ்.பி மகேந்திரன் உட்பட 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது.
மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அவர்கள் அனைவரையும் மனுவில் எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. மேலும், பிப்ரவரி, 21 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி 21 அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டைக் கையாள்வதற்கான தீர்வுத் திட்டத்தை உருவாக்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“