O-panneerselvam | chennai-high-court | aiadmk: அ.தி.மு.க பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதிஷ்குமார் முன்பு கடந்த 7ம் தேதி நடைபெற்றது.
அப்போது, அ.தி.மு.க கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசாரணைக்காக வந்தது. அப்போது தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் பெயர், கொடியை பயன்படுத்துவது சரியா என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
தங்களது தரப்பு வாதத்தை அனுமதிக்காமல் தனி நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது தவறு என்றும், பொதுக்குழு மீது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இடைக்கால தீர்ப்பு என்றும் அது இறுதித்தீர்ப்பு அல்ல என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“