கோயிலில் நடத்தப்படும் திருவிழாவிற்காக குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க மறுப்பதும் தீண்டாமை தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே இருக்கும் குன்றத்தூரில் அமைந்துள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் மே 13 முதல் 16 வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்தக் கோயில் விழாவிற்கு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று (மே 12) விசாரித்தார். அப்போது, "தீண்டாமை நம் நாட்டில் பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே" என்று நீதிபதி கூறினார்.
"கடவுள் முன்பு ஜாதி இருக்கக் கூடாது" என்று ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டிய நீதிபதி, அனைத்து சமூகத்தினரையும் நன்கொடை வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.