தகுதியான மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காத வங்கி நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம். 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நவீன் கடந்த 2014 -15 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் 1,200-க்கு, ஆயிரத்து 17 மதிப்பெண் எடுத்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்த்தார். பின்னர், ஆரணி இந்தியன் வங்கிக் கிளையில் கல்விக் கடன் கேட்டு 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பத்தார். இவர் படிக்கும் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தப்படுவது இல்லை என்று காரணம் கூறி கல்விக்கடன் வழங்க முடியாது என்று 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது.
வங்கி நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை பொருத்தவரை, மாணவர் நவீன் பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். அவரது தந்தை கடனை திருப்பிச் செலுத்தும் தகுதியை கொண்டவராக உள்ளார். சித்த மருத்துவ படிப்பும் கல்விக்கடன் திட்டத்தின் கீழ் உள்ளது.
அப்படி இருந்தும், கல்விக்கடன் வழங்க மறுத்து, அதற்கு வங்கி நிர்வாகம் அற்பத்தனமான காரணங்ளை கூறியுள்ளது. இதை ஏற்க முடியாது. 2015 ஆம் கல்வி கடன் விதிகளின் படி மாணவனுக்கு கடன் வழங்க மறுத்த வங்கி அதிகாரிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், அபராதம் விதிக்க விரும்பவில்லை. எதிர் காலத்தில் இது போன்று நடைபெறாது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிப்பதை ஏற்பதாகவும், இது போன்ற மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க மறுப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என தெரிவித்த நீதிபதி, கல்வி கடன் பெற நவீனுக்கு தகுதி உள்ளது.
இனிமேல் சட்டப்படி கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனுதாரர் கல்விக்கடன் வாங்க தகுதி உள்ளவர் என்பதால், அவரது விண்ணப்பத்தை மீண்டும் வங்கி நிர்வாகம் பரிசீலிக்கவேண்டும் என கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார்.