/indian-express-tamil/media/media_files/2025/05/17/L0EcLjxeJ0FKExPTEZi4.jpg)
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 17) உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் மாதம் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, சென்னை அருகேயுள்ள ஆவடியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்விற்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்த தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, நீட் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்று கூறி 13 மாணவர்கள் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அடுத்தகட்ட விசாரணை ஜூன் 2-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.