தற்பாலின ஈர்ப்பு சமூகத்தில் அங்கம் வகிக்கும் நபரின் பாலின அடையாளங்கள் இயற்கையானது என்றும், அவற்றை கோளாறு என்று தெரிவிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'பாலின அடையாளக் கோளாறு' என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கேள்விக்குட்படுத்தும் போது சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
"ஏதோ ஒரு வகையில், தற்பாலின ஈர்ப்பாளர்களின் அடையாளங்களுக்கு பாலின கோளாறு என்ற எண்ணம் கொடுக்கப்படுகிறது. இந்த சொல்லை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? இது நம் மனநிலையைக் காட்டுகிறது" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இயற்கையின் வாயிலாகவே அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஒரு லெஸ்பியன் தம்பதி, போலீஸ் அச்சுறுத்தல் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பில் இருந்து பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் அவதானித்துள்ளது. தற்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான பயத்தை போக்கி, அவர்களின் சட்ட உரிமைகளை அங்கீகரிக்க மருத்துவக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் என்ற மனுவின் நோக்கத்தை நீதிபதி தெளிவுபடுத்தினார். நீதிமன்றத்தின் பரிந்துரையை இழுத்தடித்ததற்காக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே, தற்பாலின ஈர்ப்பு மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்காக இரண்டு கொள்கைகளை தமிழக அரசு முன்மொழிவதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, எதற்காக இரண்டு கொள்கைகள் வகுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். ஒரே கொள்கையை அமைப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.