இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும், தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கும் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகத்தால் கோரப்பட்டது. இந்த உரிமம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு உரியது.
இந்த சூழலில் பார்கள் நடத்தப்படும் இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து தடையில்லா சான்று மற்றும் வாடகை ஒப்பந்தத்திற்கான சான்று ஆகியவற்றைப் பெற்று சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இவற்றை உரிய காலத்திற்குள் சமர்பிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அடுத்து அதிக தொகை கோரும் விண்ணப்பதாரரிடம் நில உரிமையாளரிடம் இருந்து தடையில்லாச் சான்று கேட்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த நிபந்தனை வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த நிபந்தனைகளை எதிர்த்து வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவில் நில உரிமையாளர்களின் விவரங்களை வழங்காமல் தடையில்லா சான்று, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருப்பது பாரபட்சமானது எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 27 ஆம் தேதி டெண்டர் திறக்கப்படவுள்ளதால் மேற்குறிப்பிட்ட டெண்டரை தடை செய்ய வேண்டும் என்றும், ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை டெண்டர் முடிவை தள்ளி வைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை மனுதாரர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்றும், அதனை தள்ளிவைக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, இந்த வழக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.