கருணை அடிப்படையில் பணி: திருமணமான மகளுக்கும் உரிமை – ஐகோர்ட் தீர்ப்பு

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.

High Court order to Govt upload land lease details online across Tamil Nadu
சென்னை உயர் நீதிமன்றம்

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாக 2014-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதனால், கருணை அடிப்படையில் தனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அவருடைய மகள் சரஸ்வதி என்பவர் அதே ஆண்டு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், 2017-ம் ஆண்டு மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால், அவருடைய தாயார் இறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விண்ணப்பித்ததாகக் கூறி அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, விண்ணப்பித்து இருந்தபோதும், அவர் திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை என்று சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் திலகவதி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்துணவு திட்டம் தொடர்பான உத்தரவுகளில் கருணை அடிப்படை பணி வழங்கக் கோரி விண்ணப்பித்தவருக்கு எந்தவொரு காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் திருமணமான பெண்கள் பணி நியமனம் பெற உரிமை இல்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்ற ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

மேலும், மனுதாரருக்கு அவருடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai high court order employment on compassionate grounds have rights of married daughter too

Exit mobile version