/indian-express-tamil/media/media_files/YFkuZPyIqjOPaHSNpM0k.jpg)
புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.
புதிய படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாகும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என்று நீதிபதி குறிப்பிட்டார். சினிமா விமர்சனங்களைத் தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்றும், இதை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது என்றும், அதனை நீதிமன்றம் வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஓடிடி தளங்களின் வளர்ச்சி சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக உருவாகியுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டினார். திரைப்பட தயாரிப்பாளர்கள் இதை வசதியாக மறந்துவிட்டது போல் தோன்றுவதாகவும், புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து கொண்டே வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் தன்னையும் (நீதிபதி) விமர்சனம் செய்வதைக் காண முடியும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார். இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும் என்றும், இதை கட்டுப்படுத்த இயலாது என்றும் அவர் கூறினார். ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார் என்றும், அப்போது என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தயாரிப்பாளர்களின் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள் என்றும், அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் தனக்கு நம்பிக்கை கிடையாது என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"இன்றைய உலகம் சமூக வலைத்தளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைத்தளங்களின் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/அமைப்புகள்/எந்த நாடும் தப்பிக்க இயலாது. இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பது சமூக வலைத்தள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். மக்கள், படங்களைப் பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது," இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமீப காலமாக, திரைப்பட விமர்சனங்கள் என்ற பெயரில் சில படங்கள் வேண்டுமென்றே ஓடவிடாமல் செய்யப்படுவதாகவும், பணத்திற்காக எதிர்மறை விமர்சனங்கள் அல்லது பணம் வாங்கிக் கொண்டு நேர்மறை விமர்சனங்கள் வெளியிடுவதாகவும் தயாரிப்பாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், சில நடிகர்களின் ரசிகர்கள் எதிர் தரப்பு படங்களை விமர்சிப்பதும் நடப்பதாகவும், பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் முன்பை விட மோசமாக விமர்சிக்கப்படுவதால், இந்த விமர்சனங்களை உண்மை என்று நம்பி பலர் படத்திற்குச் செல்லாததால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.