கர்ப்பிணி மனைவியையும், இரு குழந்தைகளையும் அருகிலிருந்து கவனிக்க வேண்டிய காரணத்தால் ராணுவ வீரரை சென்னையில் பணியாற்ற அனுமதிக்க மத்திய பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
சென்னையில் உள்ள ராணுவ மையத்தில் ஹவில்தாராக பணியாற்றும் சக்திவேல் கடந்த 1994 முதல் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், 2020ஆம் அண்டு ஜூன் 25ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெற இன்னும் 36 மாதங்கள் உள்ள நிலையில் இவரை ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம் செய்து சென்னை ராணுவ ஆவண சிக்னல் பொறுப்பு அதிகாரி கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், நிறைமாத கர்ப்பிணியான மனைவி, 1 மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளை, வயதான தந்தை ஆகியோரை அருகிலிருந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஓய்வு பெறுவதற்கு முன் தனது சொந்த மாநிலத்தில் பணியாற்றும் நடைமுறை உள்ளதால் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பணியிட மாற்ற உத்தரவி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் உத்தரவில், நாட்டை பாதுகாக்கும் உயரிய பணியான ராணுவ பணியில் சேர்வதற்கு தற்போதுள்ள திறமையான இளைஞர்கள் முன்வரவில்லை, அவர்கள் அதிக சம்பளம் மற்றும் சலுகைகளையே எதிர்பார்க்கிறார்கள், அதனால்தான் ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது, தற்போது இந்திய ராணுவத்தில் 1900 கேப்டன்கள், மேஜர்கள், லெப்டினண்ட் கலோனல் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. நாட்டில் தேசப்பற்றுக்கு குறைவில்லை, ஆனால், ராணுவ அதிகாரிகள் குறைவாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ விஷயங்களில் நீதிமன்றங்கள் குறைந்த அளவே தலையிட முடியும் என்றாலும், இயற்கை நியதி மீறப்படும்போது அதில் நீதிமன்றங்கள் தலையிடலாம். என்ற அடிப்படையில் பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், அவர் ஓய்வு பெறும்வரை சென்னையில் அவருக்கு பணி வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.