கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன, அதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 8 மாணவர்கள், சக மாணவரை மொட்டையடித்து, தாக்கி அவரை விடுதி அறையில் வைத்து பூட்டி ராகிங் செய்ததாக பீலமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த 8 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த பாதிக்கப்பட்ட மாணவரும் அவரது தந்தையும் இந்த விவகாரத்தப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கோரியதால், இந்த வழக்கை ரத்து செய்வதற்கு ஒப்புதல் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.
இதையடுத்து, 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராகிங் செயலில் ஈடுபடுவதாக இருந்தால் கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன, அதற்கு பதிலாக, இவர்கள் படிக்காமல் இருப்பதே நல்லது என்று கூறினார்.
மேலும், ஒழுக்கம் இல்லாமல் கல்வி பெறுவதால், எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்றும் மற்றொருவரை துன்புறுத்துவதன் மூலமாக என்ன இன்பம் கிடைக்கிறது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதை படித்தும் என்ன பயன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
படிக்க வைப்பதற்காக பெற்றோர் படுகிற கஷ்டத்தை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மனிதத் தன்மையற்ற ராகிங் செய்தால், மற்றவர்களைத் துன்புறுத்துவதன் மூலமாக இன்பமடைபவர் என்பவர் மன ரீதியாக பாதிக்கபட்டவர் என்று கருதப்பட வேண்டியிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவ பருவத்தை ரசிக்க வேண்டும், அதை விடுத்து ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்த மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“