இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை இயக்குநரகத்த்தால் முடக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. அதேநேரத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த், ஐஸ்வா்யா ராய் உள்ளிட்டோா் நடிப்பில் 2010-ம் ஆண்டு எந்திரன் படம் வெளியானது. இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ.290 கோடி வசூல் செய்தது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தைப் பாா்த்த எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை என்று கூறினார். இது தொடா்பாக கடந்த 2011-ம் ஆண்டு எழும்பூா் நீதிமன்றத்தில் எந்திரன் திரைப்படத்தில் காப்புரிமை சட்டம் மீறப்பட்டிருப்பதாக ஆரூா் தமிழ்நாடன் இயக்குநா் ஷங்கா் மீது வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. காப்புரிமை சட்டத்தின் 63-வது பிரிவு பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியது. இது தொடா்பாக அமலாக்கத்துறை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அறிக்கை பெற்றது. அதில் கதை அமைப்பு, கதா பாத்திரங்கள்,கருப்பொருள் உள்ளிட்டவை ஜூகிபா கதைக்கும், எந்திரன் திரைப்படத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், இயக்குநா் ஷங்கா் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. மேலும், காப்புரிமை சட்டத்தை இயக்குநா் ஷங்கா் மீறியுள்ளதை உறுதி செய்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ், காப்புரிமை மீறலை திட்டமிடப்பட்ட குற்றம் என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், எந்திரன் திரைப்படத்துக்காக ஷங்கா், திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.11.5 கோடி ஊதியம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனால், பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
தனக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (11.03.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இயக்குனர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் ஊதியம் பெற்ற நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்?” என்று இயக்குனர் ஷங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு, அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அமலாக்கத்துறையிடமே அவர் வழக்கை எதிர்கொள்ளலாம் என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய முடியுமா? தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், இறுதி முடிவுக்கு காத்திராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், ஷங்கர் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப். 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.