/indian-express-tamil/media/media_files/2024/11/21/lmhvHKrq752me6ZmUjbE.jpg)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர் பி. வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் பிற அரசு அதிகாரிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த விவகாரம், ஊழல் தடுப்பு அரசு சாரா அமைப்பான 'அறப்போர் இயக்கம்' தாக்கல் செய்த பொதுநல மனுவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அறப்போர் இயக்கம் தனது மனுவில், 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், டான்ஜெட்கோ (TANGEDCO) ரூ1,182.88 கோடி மதிப்பில் 45,800 மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்காக 10 டெண்டர்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. டெண்டர் ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்ததில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக ஒப்பந்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ397 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, ஏழு டெண்டர்களில், 25 முதல் 37 வரையிலான ஏலதாரர்கள் அனைவரும் ஒரே விலையை மேற்கோள் காட்டியுள்ளனர். இது டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணானது. சட்டப்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் டெண்டரை ரத்து செய்து, புதிய ஏலத்தை நடத்த வேண்டும். ஆனால், டான்ஜெட்கோ (TANGEDCO) இதைச் செய்யாமல், ஒப்பந்தங்களை அதே நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், 500kVA மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், ஒரு மின்மாற்றிக்கு ரூ12.49 லட்சம் என்ற அதிக விலையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டெண்டர் கோரப்பட்ட சமயத்தில் ஒரு மின்மாற்றியின் மதிப்பு வெறும் ரூ7.89 லட்சம் மட்டுமே இருந்தது.
இந்த முறைகேடுகள் குறித்து தனது புகார் அளித்த பின்னரும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் என்று அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஊழலில் முன்னாள் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அப்போதைய டான்ஜெட்கோ (TANGEDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கோனி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.