பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்ணின் 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றம் மற்றும் மருத்துவ குழுவை நாட அவசியம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பெண்ணை மிரட்டி நவீத் அகமத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் கருவுற்றதை அடுத்து, பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
8 வாரங்களான கருவை கலைக்க காவல் துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து கருவை கலைக்க அனுமதிக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிறப்பித்த உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்த சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் தான் கருக்கலைப்பை செய்ய முடியும் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கருவை கலைக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பித்த பிறகு, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வண்கொடுமையால் பாதிக்கப்பட்டு 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கருக்கலைப்பு தொடர்பான மத்திய அரசு சட்டத்தின் படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மருத்துவர்கள் சட்டம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்றார். 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க மருத்துவ குழுவையே, நீதிமன்றத்தை நாட நிர்பந்திக்காமல் சட்டத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் 20 வாரங்களுக்கு மேல் உள்ள கருவை கலைக்க மட்டுமே உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் கருக்கலைப்பு தொடர்பாக காவல்துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், கருக்கலைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.