தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், உழவார பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கோவில்களில் தூய்மை பணிகள் மற்றும் உழவார பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களும் பங்கேற்று சேவைகளை செய்வார்கள்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன், தமிழகத்தில் பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களில் துய்மைப்பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி, கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, திருக்கருங்குடி நாதர் திருக்கோவில், மருதநல்லூர், கும்பகோணம் கோவில், தெப்பக்குளங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்காக புகைப்பட ஆதரங்களை சமர்ப்பித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவார பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலம், 183 வைபவ ஸ்தலம், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“