அரசு ஆசிரியர்களின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் அதிரடி

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும்.

கல்வி துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால், அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார்.

ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி,  அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர், எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும்? என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி,  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் தான்  பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிப்பார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால், பணியில் இருந்து அவர் விலகி கொள்ள வேண்டும் என்றும், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
அதிக சம்பளம், உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசு பள்ளியின் மீது பெற்றொர் நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close