சட்டவிரோதமான கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்தி 1 லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தமிழகத்தில் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது.
மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குவாரிகள் குறித்து களத்திற்கு சென்று விசாரணை நடத்திய சகாயம் ஐஏஸ், ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் குவாரிகள் முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். விசரணையின்போது அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சகாயம் ஐஏஎஸ் விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உய்ர் நீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
அண்மையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு விலக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரானைட் முறைகேடுகளை விசாரித்த விசாரணை அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு அளிக்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளபட்டதை சுட்டிக்காட்டினார்கள்.
கிரானைட் முறைகேடு வழக்கை விசாரித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மற்றும் விசாரணை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று 2018ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், சகாயம் ஐஏஸ் உள்பட, விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும், பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”