அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை 10 வாரங்களில் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு விசாரணையை 10 வாரங்களில் முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு (டிவிஏசி) சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் முதற்கட்ட அறிக்கையின் நகலைக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் திங்கள் கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். விசாரணை முடிந்ததும், அறிக்கை தாக்கல் செய்யப்படும், அத்தகைய அறிக்கையை 10 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டனர்.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் டெண்டர்கள் ஒதுக்கியதில் திமுகவும் ஊழலை எதிர்க்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகார்களின் அடிப்படையில் முன்னாள் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. 2019ம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றமற்றவர் என்று டி.வி.ஏ.சி நீதிமன்றத்தில் ஒரு ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, டி.வி.ஏ.சி., மற்றொரு அறிக்கையை தாக்கல் செய்து. சி.ஏ.ஜி., அறிக்கையின் முடிவுகள், வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போவதாக சமர்பித்தது. பின்னர், புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வேலுமணியின் கோவை வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, “குற்றவிசாரனை நடைமுறைச் சட்டம் 127வது பிரிவின் கீழ் எஸ்.பி வேலுமணியிடம் நகல் ஒப்படைக்கப்படும் போது, இறுதி அறிக்கையானது எந்தக் குற்றச்சாட்டுக்கும் அடிப்படையாக அமைந்தால், அந்த அறிக்கையின் நகல் எஸ்.பி வேலுமணியிடம் ஒப்படைக்கப்படலாம். மேலும் மனுதாரரும் நகலைப் பெறலாமா என்பதைப் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றம் முடிவு செய்யும். எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமானால், இந்த உத்தரவின் போது உள்ள அவதானிப்புகள் அவருக்கு எதிராக கணக்கிடப்படக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"