ராஜீவ் கொலையாளிகள் வழக்கு: புதிய பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மனுதாரர்கள் ஆலோசனை குழுவிடம் கூறவில்லை என்று அக் குழு அரசுக்கு கொடுத்த அறிக்கையில் கூறியிருந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவிற்கு புதிய பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர், தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் வழக்கு தொடர்ந்தனர். அதில், கடந்த 2011-ஆம் ஆண்டுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், இதுநாள் வரை விடுதலை செய்யப்படவில்லை. 14 ஆண்டுகள் சிறைக்காலம் கழித்த பல ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் அறிவுரை கழகத்தில் தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்களை முன் விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சிறையில் இருந்து விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஏனெனில், இந்த வழக்கை மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ சிறப்பு குழு விசாரணை செய்தது. இதனால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், மாநில அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இது தவிர ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற மனுதாரர்கள் இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தமிழக அரசு சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டில் தயார் செய்யப்பட்ட பதில் மனுவை, தமிழக அரசு கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தது. அப்போதைய, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்த ராஜகோபால் அந்த பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டில் தான் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பார்த்தால், மனுதாரர்கள் இருவருக்கும், 2010-ஆம் ஆண்டுடன் 12 ஆண்டுகள்தான் முடிவடைந்தது. அந்த ஆண்டில் இந்த இருவரும் ஆலோசனை குழுவிடம் தாக்கல் செய்த முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது பரிசீலிக்க முகாந்திரம் இல்லை. ஏனெனில், 14 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்வது குறித்து தான், ஆலோசனை குழு பரிசீலிக்க முடியும்.

மேலும், தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மனுதாரர்கள் ஆலோசனை குழுவிடம் கூறவில்லை என்று அக் குழு அரசுக்கு கொடுத்த அறிக்கையில் கூறியிருந்தது. எனவே, இந்த இருவரின் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும்படி அரசுக்கு, ஆலோசனை குழு பரிந்துரை செய்யவில்லை. இதனால், இந்த இருவரையும் , முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது. ஆயுள் தண்டனை என்பது, வாழ்நாள் சிறையாகும் என்பதை உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெளிவு படுத்தியுள்ளது. சிறை நன்னடத்தை விதிப்படி, சிறை வாசிகள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே, ஒருவரின் தண்டனை குறைப்பு பற்றி ஆலோசனை குழு பரிசீலிக்கிறது. அந்த வரையறைக்குள்ளும் மனுதாரர்கள் வரவில்லை. எனவே, இந்த இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்யமுடியாது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தற்போது புதிய பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வருகிற செவ்வாய்க் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

×Close
×Close