தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும், தேசிய கட்டிட விதிகள் படி கட்டப்பட்டுள்ளதா? குழந்தைகள் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பள்ளிகளின் கட்டுமானத்தின் பாதுகாப்பை அனைத்து கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும், 2005 ஆம் கொண்டு வரப்பட்ட தேசிய கட்டிட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
தேசிய கட்டிட விதிகளில், அனைத்து பள்ளிகளிலும் தீ பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும், தேசிய கட்டிட விதிகளும் வெறும் காகித அளவில் இருப்பதாகக் கூறி, அவற்றை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, 'மாற்றம் இந்தியா' இயக்குனர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் தேசிய கட்டிட விதிகளின்படி மாவட்ட அளவில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும், தேசிய கட்டிட விதிகள் படி கட்டப்பட்டுள்ளதா? குழந்தைகள் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் மாவட்ட அளவில் குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.
இந்த குழு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி ஏப்ரல் 9 ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.