/indian-express-tamil/media/media_files/2025/03/04/Ivp8Tipa5vcOHp6zzA1C.jpg)
கோவில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு நாள் ஒதுக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் உள்ளது. அப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலில் தேர் திருவிழா நடத்த ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பெரியசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜராகி, பிற சமுதாய மக்களுக்கு விழாவை நடத்த அனுமதி வழங்கியிருப்பது போல இந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி விழாவை நடத்த அனுமதி வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிட்டார். அப்போது, கோவில் திருவிழா அழைப்பிதழில், சாதிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அறநிலையத் துறை தரப்பில், விழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயரை தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அறநிலையத் துறை தரப்பில், பொதுவாக இனிவரும் நாட்களில் கோயில் திருவிழாக்களின் அழைப்பிதழ் மற்றும் நோட்டீஸில் சாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டுமென ஏற்கெனவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத்துறைக்கு கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்கள் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கோயில் திருவிழாக்களில் சாதிக்கு இடமில்லை எனும்போது மனுதாரரின் கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியள்ளார்.
மேலும், கோயில்களில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், சாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்திய நீதிதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.