உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அதாவது, எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் செந்தில்குமார் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை (நவம்பர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் எனவும் ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுதும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை கண்காணிக்க வேண்டும் என பதிவாளர் அல்லிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, எம்.பி - எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.
பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட எம்.பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள அந்த வழக்குகளின் விபரங்களையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.