என்.எல்.சி-க்காக கையகப்படுத்திய நிலத்தில், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தருவது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய என்.எல்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி விரிவாக்க பணி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொல்லை தரக்கூடாது என்று கோரி இருந்தார்.
முருகன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பா.ம.க வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் என்.எல்.சி. வழக்கை அவசர வழக்காக திங்கள்கிழமை மதியம் விசாரித்தது.
அப்போது, என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும். என்.எல்.சி-யின் பிரமாண பத்திரம், மனுதாரரின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"