கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். அதேபோல் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையமே வசதியாக இருந்தது என்று தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் இருந்து தமிழத்தின் அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு ஆம்னி பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த உத்தரவை ஏற்க மறுத்து கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனையில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று கூறியிருந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனையை பொதுமக்கள் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதால், ஆம்னி பேருந்துகள் இந்த பணிமனையை பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ளவும், இறக்கிக்கொள்ளவும், அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம்.
அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யப்படும்போது, போரூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய நிறுத்தங்களை தவிர வேறு எந்த இடங்களையும் குறிப்பிடக்கூடாது. அதே சமயம் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் எந்த பேருந்துகளையும் இயக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“