சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பாக பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் விசாரணைக்கு ஆஜராகும்போது, அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி-யிடம் மனு அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் பத்திரிகையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கையை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தது யார் என்றும், மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது ஏன் ஏன்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த வழக்கில் வேறு யாரெல்லாம் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள், பாலியல் வழக்கை விசாரித்த கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதா எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.