தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைகின்றன. மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. எனவே நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று கூறி, இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர், சி.பி.ஐ அதிகாரி ஒருவர் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“