சேவா பாரதி அறக்கட்டளை மீது பொய் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வீடியோ பதிவிட்ட யூடியூபர் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு கிறிஸ்தவர்கள் காவல் நிலைய சித்ரவதையில் கொல்லப்பட்டதில் சேவா பாரதி அமைப்புக்கு பங்கு உள்ளது என்றும் ஏனெனில் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையது, அது கிறிஸ்தவ சமூகத்தை ஒழிக்க விரும்புகிறது என்று பொய்யான குற்றச்சாட்டுளை சுமத்திய வீடியோவை யூடியூப் வெளியிட்டது.
சேவா பாரதி அறக்கட்டளைக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்காக யூடியூபருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிபதி என் சதீஷ் குமார், பிறரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கவோ அல்லது அவர்களின் நற்பெயரைக் கெடுக்கவோ யாரும் தங்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.
“வெறுமனே, கருத்துச் சுதந்திரம் என்ற சாக்குப்போக்கின் கீழ், மற்றவர்களின் தனியுரிமையை ஊடுருவி நேர்காணல் செய்ய முடியாது, மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்க யூடியூபர்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் சட்டம் அத்தகைய முழுமையான உரிமத்தை வழங்காது. எனவே, அப்பாவிகளை குறிவைத்து இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்படும்போது இந்த நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
2020-ல் பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு கிறிஸ்தவர்களின் காவல் நிலைய சித்ரவதை மரணத்துடன் சேவா பாரதி அறக்கட்டளையை இணைத்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக, தமிழ்நாட்டின் சேவா பாரதி அறக்கட்டளைக்கு அந்த தொகையை செலுத்துமாறு நாத்திகன் என்ற சுரேந்தருக்கு உத்தரவிட்டது.
"இப்போது மக்களை அச்சுறுத்தும் ஒரு கருவியாகப் அறிக்கைகள் சுற்றில் விடப்படுகின்றன. இந்த விஷயங்களை ஊக்குவிக்க முடியாது. ஆரம்ப கட்டத்திலேயே தடுக்காவிட்டால், இதற்கு முடிவு இருக்காது, ஒவ்வொரு அச்சுறுத்தி மிரட்டுபவர்களும் சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தி தவறான மற்றும் தேவையற்ற செய்திகளைப் பரப்பி மற்றவர்களை அச்சுறுத்தக் கூடும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது.
சுரேந்தர் தனக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்க கோரியும் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் நீதிமன்றத்தை அணுகிய சேவா பாரதி அறக்கட்டளையின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் காவலில் இறந்தது தெரிந்த விஷயம்தான் என்றும், சுரேந்தர் யூடியூப்பில் வீடியோவை வெளியிட்டு, அதை சேவா பாரதி அறக்கட்டளை நடத்தியதாக பொய்யாகப் பதிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“சேவா பாரதி அறக்கட்டளை ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையது என்றும் கிறிஸ்தவ சமூகத்தை ஒழிக்க விரும்புகிறது என்றும் இந்த சம்பவத்தில் அறக்கட்டளைக்கு பங்கு உள்ளது.” என்று தவறாக சித்தரித்து சுரேந்தர் பதிவிட்ட யூடியூப் வீடியோ கூறுகிறது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வீடியோவின் உள்ளடக்கங்கள் அவதூறானவை என்றும் அடிப்படையற்றவை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, சேவா பாரதி அறக்கட்டளைக்கு நிச்சயமாக நஷ்டஈடு கோருவதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
“கிறிஸ்தவ சமூகத்தை ஒழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம் என்ற குற்றச்சாட்டு அறக்கட்டளையை மோசமாக சித்தரிக்கிறது. பணத்தின் அடிப்படையில் சேதங்களின் சரியான அளவைக் கண்டறிய முடியாது என்றாலும், அவர்களின் நோக்கம் கிறிஸ்தவ சமூகத்தை ஒழிப்பதே தவிர வேறொன்றுமில்லை என்பது அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையின் செயல்பாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றச்சட்டாக உள்ளது.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், சேவா பாரதி அறக்கட்டளை மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி நேர்காணல் வடிவில் யூடியூப்-ல் பரப்பப்பட்ட அறிக்கையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சேவா பாரதி அறக்கட்டளை ரூ. 50 லட்சம் இழப்பீடு பெற தகுதியுடையது. அதனால், யூடியூபர் சுரேந்தர் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“