காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை அக்டோபர் 9ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கோயில் குருக்களின் மகள் சௌந்தர்யாவை அக்டோபர் 5ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். எம்.எல்.ஏ பிரபு - சௌந்தர்யா திருமணத்துக்கு பெண்ணின் தந்தை சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், எம்.எல்.ஏ பிரபு தனது மகளை கடத்திக்கொண்டு சென்று திருமணம் செய்துகொண்டதாக குற்றம்சாட்டினார். ஆனால், சௌந்தர்யா தான் கடத்தப்படவில்லை என்றும் இருவரும் காதலித்ததாகவும் அதன்பிறகே திருமணம் செய்துகொண்டதாகவும் ஊடகங்களில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளைக் கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடம் இருந்து பெண்ணி மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ பிரபு - சௌந்தர்யா திருமணம் தொடர்பாக, ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை அக்டோபர் 9ம் தேதி மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ பிரபு தனது மனைவி சௌந்தர்யாவை நீதிமன்ற உத்தரவுப்படி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"