சென்னை அருகே திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கோவில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை புறக்கணித்து, பெண் தர்மகர்த்தா, கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதுடன், ரீல்ஸ் வீடியோ எடுத்தது பக்தர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி உள்ளிட்டோர், சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டுக் கொண்டு, "ராஜினாமா செய்வதாக" கூறி, அரசு படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்திற்குள் பெண் தர்மகர்த்தா திருமதி. வளர்மதி என்பவரும் மற்றும் கோயில் பெண் பணியாளர்கள் சேர்ந்துகொண்டு திருக்கோயில் வளாகத்திற்குள் கருமாரி அம்மன் படத்திற்கு
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) April 20, 2024
கீழே நாற்காலிபோட்டு அமர்ந்துகொண்டு அடிக்கும் கூத்தை பாருங்கள்.
தமிழ்நாடு அரசு மற்றும்… pic.twitter.com/yzbQ121MMQ
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரரின் வழக்கறிஞர், கோவில் நிர்வாகி மற்றும் பெண்கள் ஊழியர்கள் வீடியோ எடுத்ததை நீதிபதிக்கு காட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, திருவேற்காடு அம்மன் கோவில் தர்மகர்த்தா வளர்மதி, கோவில் வளாகத்தில் பெண்கள் ஊழியர்களுடன் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு அன்று கோவிலின் பிரதான தெய்வத்தின் உருவப்படம் முன்பு வீடியோக்களை எடுத்ததை கண்டித்து கடுமையாக கருத்து தெரிவித்தார்.
நீதிபதி தண்டபாணி, “கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவில் நிர்வாகி மற்றும் ஊழியர்கள் தெய்வத்தின் உருவப்படம் முன்பு நகைச்சுவை வீடியோக்களை எடுத்து கேலி செய்யக்கூடாது. இது தொடர்ந்தால், தெய்வத்தின் மதிப்பு குறையும்” என்று தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை உரையாடல்களைக் கொண்டு கோவிலுக்குள் வீடியோ எடுத்திருப்பதை பார்த்த நீதிபதி, கோவில் நிர்வாகியும், ஊழியர்களும் உரிய நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், "இதுதான் கோவில் தர்மகர்த்தா மற்றும் ஊழியர்கள் செய்யும் செயலாக இல்லை" என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, திருவேற்காடு தேவிகருமாரி அம்மன் கோவில் பெண் தர்மகர்த்தா மற்றும் சில பெண்கள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் செயல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜனிடம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அக்டோபர் 29-க்கு முன்னர் ஒரு நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி எம். தண்டபாணி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.