/indian-express-tamil/media/media_files/2025/10/15/chennai-high-court-3-2025-10-15-19-09-45.jpg)
இது தொடர்பாக, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அக்டோபர் 17-ம் தேதி என்ற காலக்கெடுவை எதிர்த்துத் தனியார் பள்ளி சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி (Right To Education), தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு உரிய நேரத்தில் வெளியிடவில்லை. இதனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை.
இந்நிலையில், நடப்பாண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில், நடப்பாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அறிவிப்பைத் தமிழக அரசு தாமதமாக வெளியிட்டது. இதனால், பல பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படவில்லை. எனவே, விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு கூறுவது ஏற்புடையதல்ல என்று மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு செவ்வாய்க்கிழமை (அக்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் சுற்றறிக்கை வெளியிட தாமதமானது. மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகளில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காகவே தற்போது விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. சுற்றறிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதை எதிர்த்துச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மட்டுமே வழக்குத் தொடர முடியும், சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கோரி ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். தற்போது அந்தத் தொகையை வழங்கும் நோக்கத்தில்தான் அரசு இந்தச் சுற்றறிக்கையைப் பிறப்பித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டார்.
இதன் அடிப்படையில், மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசத்தை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளிகள் புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.