/indian-express-tamil/media/media_files/2025/10/23/chennai-high-court-3-2025-10-23-06-34-11.jpg)
தனி நீதிபதியின் இடைக்காலத் தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, மீட்கப்பட்ட இந்த நிலத்தில் தமிழக அரசு கொண்டு வரும் பசுமைப் பூங்கா மற்றும் மழைநீர் சேகரிப்புக் குளங்கள் அமைக்கும் திட்டங்களை உடனடியாகத் தொடரலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலம் தொடர்பான வழக்கில், தனி நீதிபதியின் இடைக்காலத் தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, மீட்கப்பட்ட இந்த நிலத்தில் தமிழக அரசு கொண்டு வரும் பசுமைப் பூங்கா மற்றும் மழைநீர் சேகரிப்புக் குளங்கள் அமைக்கும் திட்டங்களை உடனடியாகத் தொடரலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்திய நிலத்திற்கு, ரூ.730.86 கோடி வாடகை பாக்கியைச் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்றும், அந்த நிலத்தைப் பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இதையடுத்து, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில், தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமைவெளிப் பூங்கா, மாநகராட்சி சார்பில் நான்கு மழைநீர் சேகரிப்புக் குளங்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
நிலத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, நிலத்தின் "அதே நிலை தொடர வேண்டும்" என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தற்காலிகமாக முடங்கின.
இந்தத் தடையை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன்பு புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.6,500 கோடி என்றும், நிலுவையில் உள்ள வாடகை பாக்கி மட்டும் ரூ.1,200 கோடி என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டங்கள் பொது நலன் கருதியே செயல்படுத்தப்படுவதால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரிக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு வழக்கறிஞர் பி.வில்சன், நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்த வழக்கு வேறு, இந்த வழக்கு வேறு, அதனால், அவர் விசாரிக்கலாம் என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "பொதுநலன்" என்ற ஒற்றை அம்சத்தைக் கருத்தில் கொண்டு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
“தற்போது மழைக்காலம் என்பதால், மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிக மிக அவசியம்” என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், திட்டங்களைத் தொடர அனுமதித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us