முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ-க்கு ஒப்படைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் மூலமாக, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், ரவீந்திரனிடமிருந்து ரூ. 30 லட்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை எனக் குற்றம் சாட்டும் ரவீந்திரன், சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கிற்கு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் செல்வாக்கு காரணமாக தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கிற்கு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான விசாரணை, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜன 6) வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதி அதிருப்தி அடைந்தார். மேலும், வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.