தனியார் பள்ளிகள், மாநில அல்லது மத்திய கல்வி வாரிய அங்கீகாரம் பெற்றுள்ளனவா, இல்லையா என அப்பள்ளிகளில் பலகைகள் வைப்பதை மாநில கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த் பள்ளியில் மழலையர் வகுப்பு (பிரி.கே.ஜி) முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இதில் உள்ள கட்டடங்கள் எந்த அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம், அல்லது மாநில கல்வி வாரியத்திடமும் அங்கீகாரம் பெறாமல் தற்போது நடத்தப்படுகிறது.
இது சம்பந்தமாக கடந்த 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டு அந்த பள்ளி அங்கீகாரம் பெறாதது என்றும் மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சம்மந்தப்பட்ட பள்ளி மீது புகார் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என சம்மந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதா, வேண்டாமா என்பதை மத்திய அல்லது மாநில கல்வி வாரியங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளனவா, இல்லையா அல்லது அங்கீகாரம் கோரிய விண்ணப்பம் சம்மந்தப்பட்ட துறையில் நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து விபரங்களை அந்தந்தப் பள்ளிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தனியார் பள்ளியை மூடக் கோரிய இந்த மனுவை பொதுநல வழக்காக கருத முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.