அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகள் எதன் அடிப்படையில் கூட்டத்துக்கு அழைக்கப்படுகின்றனர் என்பது குறித்த விளக்கம் அளிக்க கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் செயலாளர் வி.விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம், கடந்த மாதம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உத்தரவை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 177.25 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் எந்த தேர்தலிலும் போட்டியிடாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, பல்வேறு மதத்தலைவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த தகுதியின் அடிப்படையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது எனக்கோரி தலைமைச் செயலாளருக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்க வகை செய்யும் வகையில் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்னணியில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.