தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள், அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், அகற்றும் பணிகளை கண்காணிக்கவும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அவற்றில் எத்தனை ஏக்கர் நீர்நிலைகள் உள்ளன? நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க எத்தனை குழுக்கள் உள்ளன? அவை முறையாக கண்காணிக்கிறதா? லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அரசு குழுக்களால் என்ன பயன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், வழக்கில் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“