தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு 22 உறுப்பினர்களை நியமித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக சுற்றுலாத் துறைக்கும், கலாச்சாரத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசை, நடனம், நாடகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதுண்டு. இந்த நடைமுறையை மாற்றி, உறுப்பினர்களை, முதல்வரே நியமிக்கும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி இயல் இசை நாடக மன்றத்திற்கு 22 பொதுக் குழு உறுப்பினர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் ஏழு பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த வழுவூர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோதமாக பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில் இதுவரை பொதுக்குழுக் கூட்டமும் கூட்டப்படவில்லை. அதனால் இந்த அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக சுற்றுலாத் துறைக்கும், கலாச்சாரத் துறைக்கும் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார்.