தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மூன்று மாதத்தில் சிசிடிவி கேமிரா பெருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஏற்கெனவே ‘எஸ் பெண்ட்’ (8) போடும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி மின்னணு முறையில் ‘ஹெச் டிராக்’ முறை கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் முன்மாதிரி திட்டமாக தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. படிப்படியாக இந்த மின்னணு முறையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய முறை குறித்து போதுமான பயிற்சியோ அல்லது செயல்முறை விளக்கமோ தரப்படவில்லை. இதனால் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இதுதொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டு வரும்வரை பழைய முறையையே தொடர அனுமதிக்க வேண்டும். மேலும் மின்னணு ‘‘ஹெச் டிராக்’ முறையை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நடந்தது.
அப்போது அரசு தரப்பில், ‘‘ வாகனத்தை போக்குவரத்து விதிகளை மதித்து எப்படி சிறப்பாக ஓட்டுவது என்பதை கற்றுத்தருவது மட்டுமே ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் வேலை. தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான முறையை தமிழக அரசு நவீனப்படுத்தியுள்ளது. எனவே இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தலையிட முடியாது. மேலும், உரிமம் எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என மனுதாரர் கோர முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில், வாகன ஓட்டிகளே நேரடியாக வாகனத்தை ஓட்டிக்காட்டி உரிமம் பெறும் பழைய முறைக்குப்பதிலாக தற்போது துல்லியமான மின்னணு முறையில் ‘‘ஹெச் டிராக்’’ நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர் யுகத்தில் இதுபோன்ற நவீன மாற்றங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு போக்குவரத்து விதிகள் ஒருபோதும் தடையாக இல்லை. அதற்கு பயிற்சி பள்ளிகளும் ஒத்துழைக்க வேண்டுமே தவிர, மாற்றுக் கருத்துடன் இருக்கக்கூடாது. இந்த புதிய முறையை அமல்படுத்தி திறமையான ஓட்டுநர்களை உருவாக்க ஏற்கெனவே போக்குவரத்துத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தகுதியில்லாத நபர்கள் முறைகேடாக ஓட்டுநர் உரிமம் பெறுவது தடுக்கப்படுவதுடன் சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பலன் அடைவர். ஒவ்வொரு நாளும் வாகன எண்ணிக்கை பெருகி வருகிறது. வாகன ஓட்டிகளின் திறமையை முழுமையாக சோதிக்காமல் அவர்களுக்கு உரிமம் வழங்குவதால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிகளையும் வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவதில்லை. ஆர்டிஓ அலுவலகங்களில் நிலவும் லஞ்ச லாவண்யங்களால் ஊழல் மலிந்து கிடக்கிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு புதிய முறையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஓட்டுநர் உரிமத்திற்காக புதிய முறையை அமல்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதன்மூலம் படிப்படியாக ஊழல் நடவடிக்கைகள் குறையும். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் ஒன்றாக இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆர்டிஓ அலுவலகத்தின் அன்றாட பணிகளில்கூட பயிற்சி பள்ளிகளின் தலையீடு தான் அதிகளவில் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையும் சிறப்பாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் அடிக்கடி ஆய்வுகள் மற்றும் சோதனைகளை அனைத்து மட்ட அதிகாரிகள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும்.
ஊழல் சமூகத்தின் பிணி மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக உள்ளது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது மக்களும் விரக்தியில் உள்ளனர். எனவே மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மேலும், ஓட்டுநர் உரிமத்திற்காக அரசு செயல்படுத்தவுள்ள மின்னணு ‘‘ஹெச் டிராக்’’ தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை 3 மாதத்தில் பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தப்படும் கேமிராக்கள் முழுநேரம் இயங்க வேண்டும். ஒருவாரத்திற்கு மேல் அந்த கேமிராக்கள் செயல்படாமல் இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தரகர்களையோ, ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர்களையோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
திடீர் சோதனை நடத்தும் வகையில் சிறப்புக்குழுக்களை அமைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டக்கூடாது. ஆர்டிஓ-க்கள் மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளின் அசையும் மற்றும் அசைய சொத்து விவரங்களையும், பணியில் சேர்ந்த போது அவர்களுக்கு இருந்த சொத்து விவரங்களையும் ஒப்பிட்டு முறைகேடுகள் இருந்தால் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக போக்குவரத்துத்துறை செயலர் மற்றும் ஆணையர் 4 வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.