/tamil-ie/media/media_files/uploads/2023/05/Madras-HC-2-3-1-1.jpg)
Madras HC
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் போட்டியிட்டார். பழனி நாடார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: 3வது நீதிபதி நியமனம்
இதைத் தொடர்ந்து பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
செல்வ மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், "தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்குச் செலவில் 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.