கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், அந்த சங்கங்களின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்று விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று (ஏப்ரல் 16) தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், சங்கத்தில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயரை நீக்கி, சங்கத்தின் சட்டத்தில் திருத்தம் செய்து அரசை அணுக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மேலும், சாதிகளின் பெயரில் சங்கங்களை பதிவு செய்யக் கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை ஐ.ஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சாதி பெயர்களை திருத்தம் செய்யாத சங்கங்களை சட்ட விரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த, ஆதிதிராவிட நல பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அமைத்து அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாதி சங்கங்கள் நடத்தக் கூடிய பள்ளி மற்றும் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை, நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பள்ளி பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும், அவர்களின் சாதி இருக்கக் கூடாது என்றும் சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது.