கடன் விவகாரம் தொடர்பாக சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரராக கொண்ட ஈசன் புரோடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இந்த படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கப்பட்டது. அந்தக் கடன் ஒப்பந்தம் செய்யும் போது ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால், இந்த கடன் தொகையை திருப்பி வழங்காத காரணத்தினால், இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்க ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் படி 2024-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டார்.
இந்த உரிமைகளை விற்று கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை ஈசன் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் படி, இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்ட போது அதனை முழுமையாக வழங்க ஈசன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் விதமாக ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஈசன் புரோடக்ஷன்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
உத்தரவு தொடர்பாக சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 5-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.