பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டன. இந்த டெண்டரில் வங்கி உத்தரவாதத்தை குறைக்க வேண்டும், அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சென்னை பெட்ரோலிய டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் நாராயண ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், புது டெண்டர் விதிகள் எந்த விதத்திலும் தற்போதைய ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என வாதிட்டார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு தடை விதிப்பதாகவும், மேலும் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் படி, தமிழக அரசு, டி.ஜி.பி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.