600 ஹெக்டேராக சுருங்கிய பள்ளிக்கரணை சதுப்புநிலம் : ஆய்வறிக்கையில் தகவல்

Chennai high court : கடந்த 1965 ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது

By: August 20, 2019, 1:18:47 PM

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, மத்திய அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பித்து சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமனை நியமித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள கழுவேலி, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தாக்கல் செய்தார்.

அதில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்திருப்பதாகவும், கடந்த 1965 ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டியுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பைகிடங்குகளால் நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை 1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.25 ஏக்கர் சதுப்பு நிலம் தேசிய கடல் சார் கல்வி நிறுவனத்தாலும், மத்திய காற்றாலைகள் நிறுவனம், மற்றும் பல தனியார் ஐ டி நிறுவனங்களும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உயர் மின் கோபுரங்களால், அங்கு வரக்கூடிய அரிய வகை பறவைகள் இனங்கள் தற்போது வருவதில்லை எனவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும். சதுப்பு நிலத்தில் வளரும் தாவர வகைகளை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கழுவேலி சதுப்பு நிலம், 600 சதுர கிலோமீட்டரிலிருந்து 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாகவும், அங்கு சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுகுளம் உள்ளிட்ட 47 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படுவதாக கூறி மரங்கள் வெட்டப்படுவதாகவும், அந்த நீர்நிலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க கோரி கோவையை சேர்ந்த மோகன் குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அறிக்கை தொடர்பாக தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai high court pallikaranai marshland report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X